தஞ்சாவூா்: தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் அருகருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளால் பொது மக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.. மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மதுபோதையில் சிலர் பொதுமக்களிடம் தகராறு செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. மாலை வேளையில் கடைகளுக்கு செல்லும் பெண்கள், வேலை முடிந்து வருபவர்கள் குடிமகன்களால் முகம்சுளிக்கும் நிலை இருந்து வந்தது.
எனவே இந்த இரண்டு கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யப்படாததால் நேற்று மதியம் ஜமாத் தலைவர் குலாம் காதர் தலைமையில் எஸ்.டி.பி.ஐ தொகுதி தலைவர் ஜாகிர் உசேன், எஸ்.டி.பி.ஐ எஸ்.டி.டி.யு தொழிற்சங்க தலைவர் அப்துல் காதர், மகளிர் அணி மும்தாஜ், பொதுமக்கள் பிரதிநிதி மணி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானார் டாஸ்மாக் கடைகள் முன்பு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார், டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 28-ம் தேதிக்குள் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவோம் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.