கோவை : தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசுப் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாக்க வலியுறுத்தி, கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து இந்தத் தர்ணா போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன் தெரிவித்ததாவது:
“தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா மற்றும் பிற மத்திய அரசுப் பள்ளிகளில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், மண்ணின் மொழியான தமிழைப் பயிற்றுவிக்க மத்திய அரசு ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசுப் பள்ளிகளிலும் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.”
மேலும் அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலக மேடைகளில் பேசும்போதெல்லாம் திருக்குறளையும், தமிழ் மொழியின் 5000 ஆண்டு காலத் தொன்மையையும் பெருமையாகக் குறிப்பிடுகிறார். ஆனால், அவர் தலைமையிலான அரசு நடத்தும் பள்ளிகளிலேயே தமிழ் மொழிக்கு இடம் மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது. பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் ஏன் இந்த முரண்பாடு?” என கேள்வி எழுப்பினார்.