காஞ்சிபுரம்: 21 கோயில்களில் இதுவரை காணிக்கையாக பெறப்பட்டவற்றில் 1,074 கிலோ 123 கிராம் தங்க நகைகள் உருக்கப்பட்டு அந்தந்த கோயில்களின் பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள 4 முக்கிய கோயில்களின் உண்டியலில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத 53 கிலோ 386 கிராம் தங்க நகைகளை அமைச்சர் சேகர்பாபு வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் இயங்கும் கோயில்களில் பக்தர்களால் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத தங்க நகைகள் உருக்கப்பட்டு வங்கியில் முதலீடு செய்யும் வகையில் ‘தங்க முதலீட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோயில்களுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் கிடைப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு திருக்கோயில்களுக்குச் சொந்தமான, தற்போது பயன்பாட்டில் இல்லாத 53 கிலோ 386 கிராம் எடையுள்ள பலமாற்றுத் தங்க நகைகள் பிரித்தெடுக்கப்பட்டன. இந்த நகைகளை மும்பையிலுள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யும் நோக்கில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோயில் நவராத்திரி மண்டபத்தில் வைத்து பாரத ஸ்டேட் வங்கியிடம் முறையாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உள்ளிட்ட பல அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த திட்டம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலில் இருந்து 42,326.000 கிராம் தங்க நகையும், அருள்மிகு குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இருந்து 2,640.000 கிராம் தங்க நகையும், அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோயிலில் இருந்து 4,070.000 கிராம் தங்க நகையும், அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருமலைவையாவூர் பிரசன்ன திருக்கோயிலில் இருந்து 4,350.000 கிராம் தங்க நகையும் என மொத்தம் 53.386 கிலோ தங்க நகைகள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்டுள்ளன. இவை பயன்பாட்டில் இல்லாத நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த நகைகள் இன்று முதலீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கப் பெறும் வட்டித் தொகை அந்தந்த திருக்கோயிலின் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதியரசர்கள் ராஜூ, ரவிச்சந்திரபாபு, மாலா ஆகியோர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அரசு பொறுப்பேற்றப்பின் இதுவரை 21 கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்று கோயிலுக்கு பயன்பாடற்ற நிலையில் உள்ள பொன் இனங்கள் உருக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் அந்தந்த கோயிலின் பெயரில் தங்கக் கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டொன்றிற்கு கோயில்களுக்கு 17 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.