சென்னை: 5 ‘பொங்கல்’ சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காரணம் பயணிகள் ஆர்வம் காட்டாததால் பொங்கல் முடிந்து இயக்கப்பட இருந்த சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கடந்த 11ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோன்று பொங்கல் பண்டிகைக்கு சென்றவர்கள் பணியிடங்களுக்கு திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பயணிகள் ஆர்வம் காட்டாததால் பொங்கல் முடிந்து இயக்கப்பட இருந்த ஐந்து சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து வரும் 19 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 19 ஆம் தேதி இரவு 11.25 மணிக்கு கோவைக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகின்றன.
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 21 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில், போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 21 ஆம் தேதி இரவு 12.35 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு 21 ஆம் தேதி பிற்பகல் 1.50 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.