தஞ்சாவூா், அக்.9- தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்
இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால்தலை கண்காட்சி தொடங்கியது. இதை ஏராளமான மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.
இந்திய அஞ்சல் துறை சார்பில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய அஞ்சல் கோட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி களஞ்சியம் @79 இ என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழக வளாக கரிகாற்சோழன் கலையரங்கத்தில் நேற்று தொடங்கியது.
விழாவுக்கு வந்தவர்களை தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வரவேற்றார். கண்காட்சியை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி , மாவட்ட வனச்சரக அலுவலர் அகில் தம்பி, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த கண்காட்சியில் தபால் நிலையம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரையிலான ஸ்டாம்புகள் உட்பட பல்வேறு தபால் நிலைய பொருட்கள் , தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தபால் தலைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாணவர்களும், பள்ளிகளில் தபால்தலை சேகரிப்பாளர்களும் அவர்களுடைய தபால்தலை சேகரிப்புகளையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.
அழிந்து வரும் உயிரினமான கடற்பசு களஞ்சியம் இந்த கண்காட்சியின் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தொடக்க விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மற்றும் கடல் பசு பாதுகாப்பகம் ஆகியவற்றிற்கு ரோபோ மற்றும் செக்வே தாங்கிய சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல துறைகளில் வினாடி வினா, கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை அந்தந்த துறைகளில் சிறப்பானவர்களை கொண்டு நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு ஸ்டால்கள் மற்றும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைக்கான கவுண்டர்களும் அமைக்கப்பட்டு இருந்தது. நாளையும் கண்காட்சி நடக்கிறது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் கும்பகோணம் கோட்டம் அஞ்சல் கண்காணிப்பாளர் கஜேந்திரன், பட்டுக்கோட்டை கோட்டம் அஞ்சல் கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உஷா, நீலகண்டன், அண்ணா பிரகாஷ் மற்றும் அஞ்சலக அதிகாரிகள், ஊழியர்கள், மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த ஸ்டாம்புகளை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.