சென்னை: ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 127 உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-
தமிழகத்தில் மொத்தம் 391 உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் ஏற்கனவே 235 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது 127 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகளை மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் வழங்கியுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை மேலும் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உபரி உணவுகள் வீணாகாமல் தடுக்கும் திட்டம், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு, உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில் சரியான தகவல் இல்லாதவர்கள் மீது நடவடிக்கை என, துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உணவுப் பாதுகாப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. நீதிமன்றங்களில் 38 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், 1,066 சுகாதார அலுவலர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறைச் செயலர் சுப்ரியா சாகு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஆர்.லால்வேனா, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் வி.கலையரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.