சென்னை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.2,983 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீட்டு உபயோகத்துக்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 1-ம் தேதி முதல் சென்னையில் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.2,916.50-லிருந்து ரூ.2,983 ஆக உயர்ந்துள்ளது.
பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான காஸ் விலை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட உணவு சார்ந்த தொழில்களில் சமையல் செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ சிலிண்டர் விலையில் இந்த மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
