சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை?
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மற்ற மாவட்டங்களிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
நாளை மழையின் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுடன் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையின் வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
