ஐரோப்பாவின் பல பகுதிகளை கடுமையான வெப்ப அலை வாட்டி வரும் நிலையில், பிரிட்டனில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக 38.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸ் பகுதியில் வியாழக்கிழமை 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதற்கு முன்பு ஜூன் 28-ம் தேதி பதிவான 38 டிகிரி வெப்பநிலையே 2026-ம் ஆண்டின் அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது 38.1 டிகிரி வெப்பம் முறியடித்துள்ளது.
பிரிட்டனில் பல வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுக் கட்டிடங்களில் குளிர்சாதன வசதிகள் குறைவாக இருப்பதால், வெப்ப அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் வெப்பம் காரணமாக தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் தெரிவித்துள்ளது.
நீண்டகால வறட்சி காரணமாக குடிநீர் ஆதாரங்கள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கார்களை கழுவுதல், நீச்சல் குளங்களை நிரப்புதல் போன்ற அத்தியாவசியமற்ற பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வறட்சி உத்தரவை அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இந்த ஆண்டு மட்டும் 1,017 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நியூ ஃபாரஸ்ட் பகுதியில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரான்சிலும் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. ஐரோப்பா முழுவதும் நீடிக்கும் வெப்ப அலை மற்றும் வறட்சியால் காட்டுத்தீ அதிகரித்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
