வாஷிங்டன்: ஈரானுடனான பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். லாஸ் ஏஞ்சலஸில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேச்சுவார்த்தை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள தற்காலிக ஒப்பந்தத்தின்படி, வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் ஈரானுக்கு அருகிலுள்ள வடக்குப் பகுதி கடல் வழியாகவும், வெளியேறும் கப்பல்கள் ஓமன் கடல் பகுதி வழியாகவும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தற்காலிக ஒப்பந்த காலத்தில் போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மையக் கடல் பாதையில் உள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் மற்றும் ஓமன் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே ஹார்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அதேநேரத்தில், பேச்சுவார்த்தை உடன்பாட்டில் முடியாவிட்டால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
