சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 2,000 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் உண்ணிக் காய்ச்சல் எனப்படும் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. செப்டம்பர் 14-ம் தேதி தினசரி பாதிப்பு 61 ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 15-ல் 133 ஆகவும், செப்டம்பர் 18-ல் 283 ஆகவும் உயர்ந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 2,000 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
டெங்குவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டை கொசுக்கள் தேங்கிய நீரில் பெருகுவதால், வீடுகள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது முக்கியமாகிறது. கொசுப்புழு ஒழிப்பு, புகை மருந்து தெளித்தல், காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிதல் போன்ற பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே உண்ணிக் காய்ச்சல் எனப்படும் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்திய தகவலின்படி, ஒரே நாளில் 29 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் பாதிப்பு எண்ணிக்கை 4,700-ஐ எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சலுடன் உடல்வலி, தலைவலி, வாந்தி, அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக காய்ச்சல் நீடிக்கும் நிலையில் தாமாக மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது அவசியம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலம் நெருங்கி வருவதால், கொசு உற்பத்தியாகும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அகற்றுவதும், மருத்துவமனைகளில் போதிய படுக்கை மற்றும் சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருப்பதும் முக்கியமாகிறது.
