நைபிடா: 2017-ம் ஆண்டு மியான்மர் ராணுவத்தின் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா அகதிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசம் வழங்கிய பட்டியலை ஆய்வு செய்ததில் முதற்கட்டமாக இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் பாதுகாப்பு சூழல் சீரடைந்ததும், இந்த அகதிகளை படிப்படியாக மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத பின்னணி கொண்டவர்கள் தவிர, தகுதியுடைய ரோஹிங்கியா அகதிகளை தாய்நாட்டுக்கு அழைத்து வர வங்கதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
