சீனா, பாகிஸ்தானுக்கு 40 ஷென்யாங் J-35 வகை ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது பாகிஸ்தானின் வலிமையை உயர்த்தக்கூடியது என்றும், இந்தியாவுக்கு இது எதிர்வினையாக அமையக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாகிஸ்தான், சீனாவில் போர் விமான பயிற்சி பெற்ற தனது வீரர்களைத் தயார் நிலையில் வைத்துள்ளது. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்றாலும், இவ்வளவு விரைவாக இந்த விமானங்களை வழங்கும் முடிவு கவலையையும் கொண்டுவந்துள்ளது.

இந்தியாவுக்கு தற்போதைய சூழலில் ஸ்டெல்த் விமானங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்தியா தயாரிக்கும் AMCA எனும் உள்நாட்டு ஸ்டெல்த் விமானம் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இதன் சோதனை 2028-29ம் ஆண்டில் முடிந்து, 2035க்குள் இந்திய விமானப்படையில் சேரும் எனக் கணிக்கப்படுகிறது. இதுவரை இந்திய விமானப்படை பலத்த நிலையைப் பேணிக் கொண்டிருந்தது. ஆனால், J-35 போன்ற புதிய விமானங்கள் பாகிஸ்தானில் சேரும் போது அந்த நிலை குலைந்துவிடும் அபாயம் உள்ளது.
இந்திய விமானப்படையிடம் தற்போதைய காலத்தில் ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் செயல்படும் F-35 மற்றும் Su-57 என இரண்டு விருப்பங்கள் மட்டுமே உள்ளன. F-35 அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அதேசமயம், Su-57 எனும் ரஷ்யாவின் ஸ்டெல்த் விமானம் இந்தியாவின் தற்போதைய ரஷ்ய நெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒரு விருப்பமாக இருக்கலாம். ஆனால், இது இன்னும் பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறும் போது, ஸ்டெல்த் விமானங்களின் முன்னேற்றத்தில் பாகிஸ்தானின் வெற்றி இந்தியாவின் வலிமையில் புள்ளிவைக்கக்கூடும். எனவே, AMCA திட்டத்தை விரைவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். 2035 வரை காத்திருக்க முடியாத சூழ்நிலை தற்போது உருவாகி விட்டது. இந்த ஸ்டெல்த் விமானங்களை எதிர்கொள்ள நமக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.