அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது ஒரு வகையான நரம்பு செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 79 வயதான டிரம்ப், கடந்த ஜூலை மாதம் நியூ ஜெர்சியில் நடைபெற்ற பிபா உலகக் கோப்பை பைனலில் கலந்துகொண்ட போது, அவரது கால்களில் வீக்கம் இருந்தது பல பத்திரிக்கையாளர்களால் புகைப்படமாக எடுத்துக் காணப்பட்டது. மேலும், வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் நிகழ்ந்த சந்திப்பின் போது, அவரது கைகளில் காணப்பட்ட காயங்கள் உடல்நல விவாதங்களை மீண்டும் உருவாக்கின.

இந்த நிலையில், டிரம்ப்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், அதிபரின் கால்களில் ஏற்பட்ட வீக்கம் குறித்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதிலும், ‘க்ரானிக் வெனோஸ் இன்சப்பிசியன்ஸ்’ எனப்படும் நாள்பட்ட சிரை பற்றாக்குறை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய், உலகளவில் 20ல் ஒருவரை பாதிக்கக்கூடியதாகும். கால்களில் இருந்து இதயத்திற்கு ரத்தம் சரியாக பாய முடியாததால் இந்த பிரச்சனை உருவாகிறது எனவும், அடிக்கடி கைகுலுக்குவதால் ஏற்படும் திசுச் சேதமும், அவர் தொடர்ந்து உட்கொள்ளும் ஆஸ்பிரின் மருந்தும் இந்நோய்க்கு காரணம் எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது உயிருக்கு ஆபத்தான பிரச்சனை அல்ல என்றும், இதய செயலிழப்பு, தமனி அல்லது சிறுநீரக கோளாறுகள் போன்ற பாரிய உடல்நலக் குறைபாடுகளால் இது ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் லீவிட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நோய் இருப்பினும் டிரம்ப்புக்கு எந்தவிதமான வலியும், அசவுகரியமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய விளக்கத்துடன், டிரம்ப்பின் உடல்நிலை தொடர்பான ஊகங்களை முடிவுக்கு கொண்டு செல்ல வெள்ளை மாளிகை உறுதிப்படுத்த முயன்றுள்ளது. இருப்பினும், அவரது வயது மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொருட்படுத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற உடல்நல விவரங்கள் மேலும் கவனிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.