சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் ஐந்து லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டு திடலில் 1.5 லட்சம் இருக்கைகள் வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், முன்பு விஜய் ரசிகர்கள் சில தியேட்டர் மற்றும் விழாக்களில் இருக்கைகளை உடைத்த சம்பவங்கள் காரணமாக, ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐந்து பேரில் நால்வர் இருக்கைகள் தர மறுத்தனர். இதனால் ஏற்பாட்டாளர்கள் கேரளாவிலிருந்து நாற்காலிகள் வரவழைத்துள்ளனர்.
மாநாட்டுக்காக 200 அடி நீள மேடை அமைக்கப்படுவதோடு, 800 அடி நீள நடைபாதையும் உருவாக்கப்படுகிறது. தொண்டர்களின் வசதிக்காக 30 இடங்களில் டிஜிட்டல் திரைகள், 200 தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறை பாதுகாப்பு காரணமாக மாநாட்டின் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை 4 மணிக்கு மதுரையில் நடைபெற உள்ளது.
தமிழக அரசியலில் விஜய் தனது கட்சியின் வலிமையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இந்த மாநாடு மாறியுள்ளது. அரசியல் வட்டாரங்களில், இந்த மாநாட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும், எதிர்கட்சிகளின் தலைவர்கள் யாரேனும் மேடையேறுவார்களா என்பதில் கவனம் திரும்பியுள்ளது. விஜய் தனது கட்சியை மக்கள் மத்தியில் வலுவாக நிலைநிறுத்த எந்த தீர்மானங்களை எடுப்பார் என ஆவலாகக் காத்திருக்கிறது அரசியல் சூழல்.