சென்னையில் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் நடந்தது பெரும் பேச்சுக்குரியதாக மாறியுள்ளது. கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 உயிரிழந்ததை அடுத்து, தவெக நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் செல்போனை அணைத்து ஏற்காட்டில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனிப்படை அமைத்து போலீசார் அவரைத் தேடிவருகின்றனர். இதேசமயம், புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் தவெக மாவட்டச் செயலாளர்கள் தாமாகவே ஆலோசனை கூட்டம் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த கூட்டத்தில் கரூர் சம்பவத்தை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு விஜய்யின் அடுத்தகட்ட பிரச்சாரக் கூட்டங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படும் என்பதற்கும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் சம்பவத்தால் கட்சி சிக்கலில் சிக்கியிருந்தாலும், மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக முன்னெடுப்புகளை மேற்கொண்டது கட்சியின் உற்சாகத்தை காட்டுவதாக பார்க்கப்படுகிறது.
தவெகவின் பல முன்னணி நிர்வாகிகள் வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருக்கும் நிலையில், கட்சி அமைப்பின் அடிப்படை மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்துவது கட்சி உள்ளார்ந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. புஸ்ஸி ஆனந்த் இல்லாத சூழ்நிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் தவெகவின் எதிர்கால திசையை நிர்ணயிக்கக் கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது.