வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் மார்க் கார்னி, மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர் டிரம்ப் என பாராட்டியுள்ளார். அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான பேச்சுகள் முக்கியமாக நடந்தன.

அமெரிக்க அதிபர் அழைப்பின் பேரில் கனடா பிரதமர் மார்க் கார்னி வெள்ளை மாளிகையைச் சென்று, டிரம்பை சந்தித்தார். டிரம்ப் அவரை கை குலுக்கி வரவேற்றார். சந்திப்பின் போது இருவரும் நட்புரீதியான மற்றும் நகைச்சுவையுடன் உரையாடினர். மார்க் கார்னி, “நான் உங்களுக்காக சிவப்பு நிறத்தில் டைய் அணிந்துள்ளேன்” என்று கூறியதாக வீடியோ வெளியாகியுள்ளது.
இருதரப்புப் பேச்சில், அமெரிக்க-கனடா வர்த்தக ஒப்பந்தம், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் காசா மோதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மார்க் கார்னி, “மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்கிறார். அதற்காக நாம் உதவ தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பில் கனடாவை 51வது அமெரிக்க மாநிலம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு, உறவை வலுப்படுத்தும் வகையில் பல விஷயங்களை விவாதித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி தெளிவான பேச்சு நடைபெற்றது. இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.