பட்டுக்கோட்டை: கொத்தடிமை, குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறையின் சார்பில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூண்டு வரை உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், கார்ப்பரேசன் கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், மருந்துக்கடைகள், பழக்கடைகள் மளிகைக் கடைகள், செல்போன் கடைகள் போன்ற அனைத்து வகையான கடைகளையும், தொழிலாளர் நலத்துறையின் பட்டுக்கோட்டை உதவி ஆய்வாளர் வெ.ப.லாவண்யா தலைமையில், மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக்குழு உறுப்பினர் டாக்டர் டி.புனல்ரவி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக தன்னார்வலர் தினேஷ்குமார் கொண்ட குழுவினர் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, கடைகளில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தை மற்றும் வளரும் பருவ குழந்தைகள் தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளார்களா என்றும், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக அமர்த்தப்பட்டு உள்ளார்களா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
கடைகளில் அனைத்து தொழிலாளர்களின் சம்பளம் உட்பட அனைத்து வகையான பதிவேடுகளும் பராமரிக்க வேண்டும் எனவும், வெளி மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது ஆதார் கார்டு மற்றும் ஆதாரங்களோடு பதிவு செய்து பராமரிப்பதோடு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவலாக ஆதாரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என்றும், கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கடை உரிமையாளரிடம் அனைத்து “எங்கள் கடையில் குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்தப்படவில்லை என்றும், தொழிலாளர் துறையின் உதவி ஆய்வாளர் பாலசந்தர் அலைபேசி எண் 9943993913″ஐ பதிவு செய்து தகவல் பலகை கடைக்கு முன்பு வைக்க வேண்டும்” அறிவுரை வழங்கப்பட்டது.