புதுடில்லி: தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் ஏப்.23ம் தேதி தேர்தல் நடக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தலை நடத்தி முடித்திட இந்திய தேர்தல் கமிஷன் பணியாற்றி வருகிறது. இதனை முன்னிட்டு 5 மாநிலங்களுக்கும், தேர்தல் கமிஷனர் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அங்கு அனைத்து ஆய்வுகளும் முடிந்த நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து டெல்லியில் மதிப்பாய்வு நடைபெற்ற நிலையில் தேர்தலுக்கான தேதிகளையும், வேட்புமனு தாக்கல் போன்ற தேர்தல் நடைமுறைகளுக்கான தேதிகளையும் தேர்தல் கமிஷனர்கள் தேர்வு செய்து வைத்து விட்டனர்.
தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகளுக்காக நேற்று தேர்தல் கமிஷனில் ஆலோசனையும் நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் தேதியை அறிவித்த உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.