தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த வல்லம், மாதாக்கோட்டை பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் சண்.ராமநாதன் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.
தஞ்சை சட்டசபை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக சண்.ராமநாதன் போட்டியிடுகிறார். அவர் தஞ்சை தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை தஞ்சை மிஷின் தெரு அருகே உள்ள தூய பேதுரு ஆலயம் மற்றும் பூக்காரத்தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு நேரில் சென்று கிறிஸ்தவ மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து மாதாக் கோட்டை பகுதியில் உள்ள காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, அன்னை தெரசா நகர், மாதாக்கோட்டை, மேலவஸ்தாச்சாவடி ஆகிய பகுதிகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் சண்.ராமநாதன் பேசியதாவது:-

சிறுபான்மை மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசு நமது திராவிட மாடல் அரசு . திராவிட முன்னேற்றக் கழக அரசில்தான் என்னற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய வேண்டும் என்றால், நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தஞ்சை மாநகராட்சிக்கு எண்ணற்ற திட்டங்களை நமது அரசு செய்துள்ளது. மேலும் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை செய்ய இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அவர் செல்லும் இடம் எங்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் சண் . ராமநாதன் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும்போது சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், பகுதி செயலாளர்கள் கரந்தை கார்த்திக், வாசிம் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், நாஞ்சிக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதே போல் தஞ்சை மேலவீதியில் உள்ள 18-வது வார்டில் வேட்பாளர் மேயர் சண்.ராமநாதனின் மனைவி சங்கீதா சண்.ராமநாதன், மகள் தர்ஷாராமநாதன் ஆகியோர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் துண்டுபிரசுரங்களை வழங்கியும், உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.