காத்மாண்டு: இந்தியா – நேபாள எல்லை விவகாரம் தொடர்பாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய பாலேந்திர ஷா, இந்தியா – நேபாள எல்லைப் பிரச்சினை ஒருதலைப்பட்சமான விவகாரம் அல்ல என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து நேபாள மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் மாதத்தில் பிரதமராக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா தலைமையிலான அரசுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்தை அவர் தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டி, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி பகுதிகள் தொடர்பான எல்லை விவகாரம் இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மூன்றாம் தரப்பாக பிரிட்டன் தலையிடலாம் என்ற பாலேந்திர ஷாவின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.