புதுடில்லி: இந்தியாவில் 180 நாட்களுக்கு மேல் தங்க விரும்பும் வெளிநாட்டு குடிமக்களுக்கான பதிவு நடைமுறைகளில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, 180 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான விசாவில் இந்தியா வந்தவர்கள், தங்கும் காலத்தை நீட்டிக்க விசா முடிவடைந்த 14 நாட்களுக்குள் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் புதிய விதிகளின்படி, விசா காலம் முடியும் வரை காத்திருக்காமல், அதற்கு முன்பே தங்கும் கால நீட்டிப்புக்காக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு தம்பதியருக்கு இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் தொடர்பான விதிகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய குடியுரிமையைத் தக்கவைக்க விரும்பினால் உடனடி தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், வெளிநாட்டு குடியுரிமை பெறும் சூழலில் மட்டும் 30 நாட்களுக்குள் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.