பெங்களூரு: டி.கே.சிவகுமார் தலைமையிலான புதிய கர்நாடக அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் 25-வது முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற நிலையில், புதிய அமைச்சரவையில் 12 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், அந்த அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா வெளியிட்டுள்ள கருத்தில், “புதிய அமைச்சரவையில் குறைந்தபட்சம் ஒரு பெண்ணாவது இடம்பெறுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒருவர்கூட இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரசில் 4 பெண் எம்எல்ஏக்களும், 5 பெண் எம்எல்சிகளும் உள்ள நிலையில், அவர்களில் யாரும் அமைச்சரவையில் சேர்க்கப்படாதது கவனத்தை ஈர்த்துள்ளது.
இருப்பினும், விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் பெண் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.