சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மற்றும் 2022 பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துள்ளன.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கியதை எதிர்த்தும், 2022ம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்தும் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகளை திரும்ப பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ல், பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. இதையடுத்து, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், 2022ம் ஆண்டு ஜூலை 11ல் கூட்டப்பட்டது.
இதற்கு தடை கோரி, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தடை விதிக்க மறுத்தது. பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, பொதுச்செயலர் பதவி உருவாக்கப்பட்டது.
பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நான்கு பேரும், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் தாங்கள் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற அனுமதி கோரி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தன. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்து, வழக்குகளை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல், கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தடை விதிக்க வேண்டும் என பழனிசாமி தாக்கல் செய்த வழக்கையும் திரும்ப பெற அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.