மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீஸாருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யவும், ரத்து செய்யவும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி கரோனா ஊரடங்கு நேரத்தை மீறி செல்போன் கடை திறந்திருந்ததாகக் கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. பின்னர் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீஸாரை சிபிஐ கைது செய்தது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், 9 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து, ரூ.1 கோடிக்கும் அதிகமான அபராதத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்க உத்தரவிட்டது.
இந்நிலையில், தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பிலும், தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகள் தரப்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை ஜூன் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது.