புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளுக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பாரதி பூங்கா எதிரே செயல்பட்டு வந்த பழைய ஆளுநர் மாளிகை கட்டிடத்தில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், துணை நிலை ஆளுநர் அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
குபேர் சாலையில் அமைந்துள்ள புதிய அலுவலகத்தில் இன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டன. தனது முதல் நாள் பணியில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மூன்று முக்கிய கோப்புகளை பரிசீலித்து கையெழுத்திட்டார்.
அதன்படி, 21 முதல் 55 வயதுக்குட்பட்ட ஏழை குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 64,450 பெண்கள் பயனடைய உள்ளனர்.
மேலும், முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான உதவித்தொகை வழங்க ரூ.56.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பிப்டிக் நிறுவன பங்குதாரர்களுக்கு பங்குத் தொகை மற்றும் சிறப்பு பங்குத் தொகை வழங்கும் கோப்புக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.