சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டாஸ்மாக் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
கடந்த ஆட்சிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக கூறப்பட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், வருமானம் இல்லாத அல்லது பார்கள் இல்லாத சில கடைகள் மட்டுமே மூடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் தற்போது மூடியுள்ள 717 டாஸ்மாக் கடைகளில் சில கடைகளின் தினசரி விற்பனை ரூ.25 லட்சம் வரை இருந்தது. குறைந்தபட்சமாக ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைத்தது. இதனால் அரசுக்கு மாதந்தோறும் ரூ.7,000 முதல் ரூ.8,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.
மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும், பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
“நாங்கள் வந்தது 20 நாட்கள்தான் ஆகிறது. பொறுமையாக செயல்பட்டோம். ஆனால் தொடர்ந்து விமர்சனம் செய்தால், கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவோம்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.