பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி நள்ளிரவில் ரகசியமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பிடிஐ கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை சிறை அதிகாரிகள் நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை சிறை விதிமுறைகளை மீறியதாகவும், மனித உரிமை மீறலாகவும் பிடிஐ கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாண அமைச்சர் ஷஃபி ஜான் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த நான்கு மாதங்களாக இம்ரான் கான் கண் பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு மூன்று மணி நேரம் எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ வசதிகள் மறுக்கப்படுவதாகவும், நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபியை உடனடியாக இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றி, அவர்களது சொந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பிடிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.