அமெரிக்கா: ஈரான் அனுப்பியதாகக் கூறப்படும் 4 டிரோன்களை ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கும் ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை நோக்கி வந்த 4 டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் முன்னதாக குவைத் மற்றும் பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், ஈரானின் கெஷ்ம் தீவு மற்றும் கோருக் பகுதிகளில் உள்ள தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு வீரர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி, “லெபனானின் இறையாண்மையை மீறும் செயலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுவதை இஸ்ரேல் விரும்பவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த பதற்றம், சர்வதேச சமூகத்தின் கவலையை ஏற்படுத்தியுள்ளது.