லண்டன்: லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்திடம் அவரது ‘கரப்பான்பூச்சி’ கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிர்க்பெக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்’ தொடர்பான நிகழ்ச்சியில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் பங்கேற்றார்.
நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்த சிலர், இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அதேசமயம், தலைமை நீதிபதி முன்பு தெரிவித்திருந்த ‘கரப்பான்பூச்சிகள் போல சமூகத்தை சீரழிக்கின்றனர்’ என்ற கருத்து குறித்தும் விளக்கம் கோரினர்.
இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, சமூக வலைதளங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் குறித்து விமர்சித்தபோது தலைமை நீதிபதி இந்த கருத்தை தெரிவித்திருந்தார். பின்னர், அனைத்து இளைஞர்களையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவற்றை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் குறைந்தபட்ச ஒழுக்கம் கடைபிடிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.