சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது குதிரை பேரம் நடந்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக எழுந்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் எம். சீனிவாசன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் தவெகவில் இணைந்ததாகக் கூறப்படும் மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக கட்சி மாறிய இந்த 4 பேருக்கும் எதிர்கால தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு மீது உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.