நேபாளம்: இந்திய மாம்பழங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, எந்த தடையும் இல்லை என்று நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. அதிகளவு பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் எல்லைப் பகுதிகளில் தரப்பரிசோதனை வசதிகள் இல்லாததே காரணம் என கூறப்பட்டது.
இந்த தகவலால் எல்லைப் பகுதிகளில் மாம்பழ லாரிகள் நிறுத்தப்பட்டதால் வியாபாரிகள் மத்தியில் கவலை ஏற்பட்டது.
இந்நிலையில் நேபாள வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மாம்பழங்களுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
சந்தைத் தேவை மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் அடிப்படையிலேயே மாம்பழங்கள் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அதிகாரிகள் வழங்கிய தரச்சான்றிதழ்களை தொடர்ந்து எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த மாம்பழ லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய இறக்குமதியை தடுத்தால் உள்நாட்டு சந்தையில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என வியாபாரிகள் எச்சரித்த நிலையில், நேபாள அரசின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.