ஜெய்ப்பூர்: நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகள், வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கலந்து கொண்டார். ஷாஹித் ஸ்மாரக் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் திரண்டிருந்தனர்.
போராட்டத்தின் போது ஆதரவாளர்களால் தோளில் சுமந்து செல்லப்பட்ட அபிஜித் தீப்கேவை நோக்கி கூட்டத்திற்குள் நுழைந்த சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர். அவருடைய கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கூட்டத்தில் இருந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தடுப்புக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து அபிஜித் தீப்கே கூறுகையில், “இது கோழைத்தனமான செயல். உடல் ரீதியான தாக்குதல்கள் பயத்தின் வெளிப்பாடு. காந்தி மற்றும் அம்பேத்கர் காட்டிய வழியில் அமைதியான முறையில் எங்கள் போராட்டத்தை தொடர்வோம்” என்றார்.