புதுடில்லி: நாடு முழுவதும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகளை வாங்க முடியாத வகையில் மத்திய அரசு புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான தரமற்ற இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு சில மாநிலங்களில் ‘கோல்ட்ரிப்’ என்ற இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் அந்த மருந்தில் நச்சுத்தன்மை கொண்ட டைஎத்திலீன் கிளைகோல் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், மருந்து விற்பனை விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இனி டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகளை மருந்தகங்கள் விற்பனை செய்யக் கூடாது.
மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டதுடன் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.