சென்னை: எந்த அரசியல் கட்சிக்கும் தான் ஆதரவாளன் இல்லை என்றும், அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாதவன், தொடர்ந்து தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.
தற்போது இந்தியாவின் ‘எடிசன்’ என அழைக்கப்படும் மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தில் மாதவன், ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பேசிய மாதவன், தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை என்றும், அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அரசியலை மிகவும் பொறுப்பான விஷயமாக பார்ப்பதாகவும், யாராவது நல்ல காரியங்களைச் செய்தால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தனது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மக்கள் முதலமைச்சராகவோ பிரதமராகவோ ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், அவருக்கு ஆதரவளிப்பது தனது கடமை என நினைப்பதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார். ‘துரந்தர்’ படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, அவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மாதவனின் இந்தப் பேட்டி கவனம் பெற்றுள்ளது.
