சென்னை: தமிழக அரசின் நிதிநிலையை சீரமைக்க குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது தேவைப்படும் என்று நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் நிதிநிலை மிகவும் இக்கட்டான நிலையில் இருந்ததாக தெரிவித்தார்.
நிதிநிலையை சீரமைக்கும் வகையில் வருவாய் ஆதாரங்களை அதிகரித்தல், செலவினங்களை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். ஒரே ஆண்டில் நிதிநிலையை முழுமையாக சீரமைக்க முடியாது என்றும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசிடம் இருந்து சுமார் ரூ.7 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை வர வேண்டியுள்ளதாகவும், டாஸ்மாக் மூலம் ரூ.1,500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜிஎஸ்டி நடவடிக்கைகள் மூலம் கூடுதலாக ரூ.4,500 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தின் மொத்த பற்றாக்குறை ரூ.1.22 லட்சம் கோடியாக உள்ளதாகவும், இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியாக இருந்ததாகவும், இந்த ஆண்டு கடன் அளவு வருவாயை விட 3.17 மடங்காக குறையும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
