பிரிஸ்டினா: கொசோவோ நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி எம்.பி. முட்டைகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு கொசோவோ நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளில் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும், இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
முட்டைகளை வீசிய எம்.பி.
அப்போது அலையன்ஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டைம் காத்ரிஜாஜ், தன்னிடம் வைத்திருந்த பழுப்பு நிற முட்டைகளை எடுத்து இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி மீது வீசத் தொடங்கினார்.
இதனுடன் நிற்காமல், பிரதமரை நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் “அவமானம், அவமானம்” எனக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை மோசமடைவதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்புப் பணியாளர்களும் உடனடியாக தலையிட்டு அந்தப் பெண் உறுப்பினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
நாடாளுமன்ற நடவடிக்கை நிறுத்தம்
எதிர்பாராத இந்த சம்பவத்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை முன்மொழிவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்ற கோரிக்கையை முன்வைத்திருந்த சூழலில் இந்த முட்டை வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட இந்த மோதல், கொசோவோவின் அரசியல் சூழலில் நிலவும் பதற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
