சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேர்வுக் குழுவுக்கு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்குகிறார்.
மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ள இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.ரா. சம்பத், ஓய்வு பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் இராமநாதன், ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கோயில்களின் நிர்வாகம், கோயில் சொத்துக்களைப் பராமரித்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து, அவர்களை பரம்பரை சாரா அறங்காவலர்களாக நியமிப்பதே இக்குழுவின் முக்கியப் பணியாகும்.
அர்ச்சனா கல்பாத்தி அகோரம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். மேலும், ‘பிகில்’, ‘கோட்’ உள்ளிட்ட நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
