அலகாபாத்: சாதியைக் குறிக்கும் வார்த்தையை பயன்படுத்துவது மட்டுமே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒருவரை அவமதிக்கும் நோக்கத்துடன் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால்தான் அந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருத முடியும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கில், ஒருவரை குறிப்பிடுவதற்காக குறிப்பிட்ட சாதிப் பெயர் பயன்படுத்தப்பட்டதாக வெக்ராஜ் மற்றும் தெளலத் ஆகியோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் தங்களை திட்டியதாகவும், சாதிப் பெயரை பயன்படுத்தி அவமதித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு சாதிப் பெயரை பயன்படுத்தியதன் அடிப்படையில் மட்டுமே அந்த நபரை அவமதிக்கும் நோக்கம் இருந்ததாக முடிவு செய்ய முடியாது என தெரிவித்தது. மேலும் குற்றச்சாட்டுக்குள்ளான இருவருக்கும் எதிராக குறிப்பிட்ட மற்றும் போதுமான பங்கு இருப்பதை காட்டும் ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதையடுத்து வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.
