சென்னை: நடிகை நயன்தாரா திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நயன்தாரா தான் நடிக்கும் திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பொதுவாக பங்கேற்பதில்லை என்ற விமர்சனம் திரையுலகில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. சமீபத்தில் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். யாஷ் தனிப்பட்ட முறையில் அழைத்ததாலேயே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக நயன்தாரா தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நயன்தாரா தயாரித்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் நயன்தாரா நடிகர் கவினுடன் பங்கேற்றார். மேலும், படத்தின் விளம்பரப் பதிவுகளையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், நயன்தாரா தனது கணவர் தயாரிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நிலையில், மற்ற தயாரிப்பாளர்களின் பட விழாக்களுக்கு வர மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தயாரிப்பாளர்களின் சிரமங்களையும் சூழ்நிலைகளையும் நடிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், ஆரம்ப காலத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட நடிகர்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், முன்னணி நடிகர்களாக வளர்ந்த பிறகு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
