ஐதராபாத்: ஐதராபாத்தில் நடைபெற்ற ‘டாக்ஸிக்’ திரைப்பட நிகழ்ச்சியில் ஸ்பீக்கர் ஸ்டாண்ட் சரிந்து விழுந்து சிலர் காயமடைந்ததைத் தொடர்ந்து, சென்னையில் இன்று நடைபெற இருந்த படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா, நயன்தாரா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் யாஷ், கியாரா அத்வானி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். யாஷைக் காண ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நிகழ்ச்சியின்போது ஒலிபெருக்கிகள் மற்றும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட இரும்பு ஸ்டாண்ட் சரிந்து கூட்டத்தினர் மீது விழுந்தது. இதில் இரு மாணவர்கள் காயமடைந்ததுடன், ஒரு மாணவி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவத்தை பார்த்த யாஷ் தனது பேச்சை உடனடியாக நிறுத்தி, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசாரித்தார். மேலும், ஸ்பீக்கர் கட்டமைப்பின் மீது ஏறியிருந்த ரசிகர்களை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சியை நடத்திய கல்வி நிறுவன நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற இருந்த ‘டாக்ஸிக்’ பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு, ஆகஸ்ட் 24-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.
