சென்னை: ‘கே.ஜி.எப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள யாஷ், கல்லூரி காலத்தில் தனது குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக தாழ்வு மனப்பான்மையை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாக உள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் ஆக்ஷன், திரில்லர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கல்லூரி காலத்தைப் பற்றி பேசிய யாஷ், அப்போது மற்ற மாணவர்களின் பொருளாதார வசதியுடன் தனது குடும்ப சூழ்நிலையை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதாக கூறினார். குடும்பத்தை முன்னேற்ற சிறிய மளிகைக் கடை நடத்தப்பட்டதாகவும், கல்லூரி செல்வதற்கு தனது தந்தையின் பழைய ஸ்கூட்டரை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், பெற்றோர் தமக்குச் சொத்துகளை சேர்க்க முடியாவிட்டாலும், வாழ்க்கைக்கான அனுபவங்களையும் அசைக்க முடியாத ஆதரவையும் வழங்கியதாகவும், அவர்களின் தியாகங்களுக்கு நன்றியுடன் இருப்பதாகவும் யாஷ் கூறியுள்ளார்.
