சென்னை: எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, சென்னையில் பொருத்தமான இடத்தில் கூடுதல் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) வலியுறுத்தியுள்ளது.
சி.ஐ.ஐ. தென்னிந்திய பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் புருஷோத்தமன் கூறுகையில், இந்தியா பல்வேறு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையில், திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றார்.
இதனால் எதிர்காலத்தில் விமான சரக்கு போக்குவரத்துக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். சென்னை சர்வதேச விமான நிலையத்தை மேலும் விரிவாக்குவதுடன், மற்றொரு விமான நிலையமும் அவசியம் என்றும் கூறினார்.
விமான நிலையம் அமைக்க நான்கு இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பரந்தூரைத் தவிர மற்ற மூன்று இடங்கள் எவை என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
