சென்னை: திரையரங்குகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை குறைந்தபட்சம் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள போராட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘யுவர் பேக்கர்ஸ் ப்ளே’ என்ற ஓடிடி தளத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், ஓடிடி தளங்கள் ஆரம்பத்தில் சினிமாவுக்கு பலம் சேர்க்கும் கருவியாக இருந்ததாகவும், தற்போது சினிமாவையே கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
முன்பு திரைப்படங்களை வாங்குவதற்கு ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில், தற்போது புதிய படங்களை வாங்குவதை பல நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக அவர் கூறினார். மேலும், தாங்கள் வாங்கும் திரைப்படங்களின் வெளியீட்டு தேதியையும் ஓடிடி நிறுவனங்களே முடிவு செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தேக்கமடைந்து கிடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழில் புதிய ஓடிடி தளம் தொடங்கப்பட்டிருப்பதை வரவேற்ற ஆர்.கே.செல்வமணி, திரைப்பட லாபத்தில் 20 சதவீதத்தை சினிமா தொழிலாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரைப்படப் பணிகளை நிறுத்தும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள போராட்டத்தால் திரைத்துறைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.
படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரைத்துறையினரிடையே நிலவும் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
