சென்னை: ‘கலீபா’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான கைரா வாசுதேவன், எத்தனை மொழிகளில் நடித்தாலும் மலையாள சினிமாவை விட்டு விலகமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கலீபா’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கைரா வாசுதேவன், தற்போது புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கலீபா’ படத்தின் வெற்றி தனக்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். பிருத்விராஜ் மற்றும் இயக்குநர் வைசாக் உள்ளிட்டோருடன் பணியாற்றியது பெருமையாக இருந்ததாகவும், பெரிய நடிகர்களுடன் நடிப்பது குறித்து ஆரம்பத்தில் தனக்குள் இருந்த அழுத்தத்தை அவர்கள் போக்கியதாகவும் கூறினார்.
மேலும், “நான் எத்தனை மொழிகளில் பணியாற்றினாலும் மலையாள சினிமாவை விடமாட்டேன். எனக்கு அதுதான் வீடு. வேறொரு மாநிலத்தில் இருப்பதாகவே உணரவில்லை. அதேவேளை தென்னிந்திய மொழிகளில் கலக்கவும் ஆசையாக உள்ளது” என கைரா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
