சென்னை: நடிகர் சிம்பு, ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை பாராட்டி, புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் தமிழ் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் அதே அன்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாகவும், அனிஷ்மா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும்.
ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி ‘மொத ராத்திரி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
காதல், நகைச்சுவை கலந்த கதை
புதிதாக திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றன.
சுமார் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் வாரத்தில் ரூ.3 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிம்பு வேண்டுகோள்
இந்த நிலையில், ‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டி நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிற மொழிகளில் வெளியாகும் நல்ல திரைப்படங்களை தேடிப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவதைப் போல, புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் தமிழ் திரைப்படங்களுக்கும் அதே அன்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிம்புவின் இந்த பதிவு ‘மொத ராத்திரி’ படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
