சென்னை: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தனது காட்சிகளுக்கான பணிகளை நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நிறைவு செய்துள்ளார்.
‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இதனைத் தொடர்ந்து ‘காந்தா’, ‘கிங்டம்’, ‘ஆந்திரா கிங் தாலுகா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும், இந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வணிக ரீதியான வெற்றியை பெறாததால், அவர் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
இந்த நிலையில், சமீபத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியான ‘லெனின்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அவரது திரைப்பயணத்தில் மீண்டும் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
‘சேயோன்’ படத்தில் கதாநாயகி
‘லெனின்’ படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேஷன் இப்படத்தை இயக்கி வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், பாக்யஸ்ரீ போர்ஸ் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘சேயோன்’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
