சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் ‘ஓம்’ திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், படம் அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் அவர் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த திரைப்படத்துக்கு ‘ஓம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
நட்சத்திர பட்டாளம்
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், பாலிவுட்டின் மூத்த நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ‘ஓம்’ படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷின் பிறந்தநாளையொட்டி வெளியான ‘அலாக்கா லோவா’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இயக்குநர் கொடுத்த அப்டேட்
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்தின் தற்போதைய நிலை குறித்து பேசியுள்ளார்.
கதையை உருவாக்கும்போதே குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்கு யார் நடிக்க வேண்டும் என்பதில் தனக்கு ஒரு விருப்பப் பட்டியல் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக கார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கு மம்முட்டியை முதல் தேர்வாக நினைத்ததாகவும், தனுஷ், இந்திரன்ஸ், நஸ்ருதீன் ஷா, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோரை மனதில் வைத்தே கதையை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார்.
அவர்களிடம் கதையின் மையக்கருத்தை எடுத்துச் சென்றபோது அனைவரும் உடனடியாக நடிக்க சம்மதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது படம் எந்த அளவுக்கு உருவாகியுள்ளது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், ‘ஓம்’ இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதாகவும் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். படம் அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
