சென்னை: திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், ‘என்ன விலை’ திரைப்படம் தனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்துள்ளார்.
கலமாயா சினிவெர்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் ‘என்ன விலை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை நிமிஷா சஜயன் மற்றும் நடிகர் கருணாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறுவர், சிறுமிகளும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமூக-அரசியல் பின்னணியில் குடும்ப திரில்லர்
சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்ப திரில்லர் கதையாக ‘என்ன விலை’ உருவாகியுள்ளது. கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ள இப்படம் ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி, கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று கட்டங்களாக படமாக்கப்பட்டுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த திரைக்கதை ஆசிரியரான சஜீவ் பழூர், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
நான்கு விருதுகள்
‘என்ன விலை’ திரைப்படத்தை சஜீவ் பழூர் ஏற்கனவே பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியுள்ளார். இதில் படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இப்படம் பெற்றுள்ளது. மேலும், துருக்கியில் நடைபெற்ற கையா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் ‘என்ன விலை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சித்தன்னவாசல் சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிறந்த இந்திய திரைப்படம்’ என்ற விருதையும் இப்படம் வென்றுள்ளது.
“மறக்க முடியாத படம்”
திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் இந்த நேரத்தில் ‘என்ன விலை’ திரைப்படம் தனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட ஒரு படக்குழுவிற்காகவும் தான் காத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் சஜீவ் பழூர் கதையை கூறியவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், படக்குழுவினர் அனைவரும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும், திரைப்பட விழாக்களில் கிடைக்கும் விருதுகளும் அங்கீகாரங்களும் ஊக்கமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ஒரு திரைப்படம் மக்களுக்கானது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் ‘என்ன விலை’ திரைப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொடும்” என கருணாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.
