சென்னை: டாஸ்மாக் பணியாளர்கள் 217 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை புறநகர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் எழுந்து வந்தன. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதற்கிடையே, கடைகளின் பராமரிப்பு செலவுகள் உள்ளிட்டவற்றை ஊழியர்களே ஏற்க வேண்டிய நிலை இருப்பதால் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற மதுவிலக்குத் துறை மானியக் கோரிக்கையின்போது, டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதுடன், கடைகளின் பராமரிப்பு செலவுகளை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய புகார் சேவை மையத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 217 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகார்களின் அடிப்படையில் உரிய விசாரணையின்றி பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையே மூடப்பட்ட கடைகளை தற்காலிக பணியாளர்களைக் கொண்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
